சோமாலியா: ஏழை தேசத்தில் முண்டா தட்டும் அமெரிக்கா!அபூசாலிஹ்
உலகத்தின் அமைதியை சீர்குலைத்து நாடுகளின் இறையான்மையை மாசுபடுத்தி அதிகாரப்பரவலையும் ஆதிக்க வெறியினையும் பரப்பி வரும் அமெரிக்க ஏகாதி பத்திய சக்தியின் அடுத்த குறி யார்? எந்த நாட்டில் அமெரிக்கா குண்டு போடும்? அமெரிக்க ஏவுகணைகள் எந்த நாட்டின் தரைப்பகுதியை, கடல் பகுதியை வான்வெளியை தாக்கப் போகிறது? தீவிரவாதிகளின் புகலிடம், உலகிற்கே அச்சுறுத்தல், அமெரிக்காவுக்கு ஆபத்து என வகை வகையாய் கள்ள காரணம் சொல்லி எந்த நாட்டை அமெரிக்கா அபகரிக்கும் என உலக அளவில் அரசியல் ஆய்வாளர்கள் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியாகி விட்டது. உலகின் மிகப்பெரிய நாசகார போர்விமானத்தை இஸ்ரேல் கட்டத் தொடங்கி விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை குறித்த தீர்மான வடிவங்களுக்கு 'ஒரு வேஸ்ட் பேப்பருக்கு' கொடுக்கும் மரியாதையைக் கூட நாங்கள் வழங்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத்அதிரடியாய் அறிவித்து விட்டார். அடுத்ததாக்குதல் ஈரானின் மீதா? அல்லது சிரியாவின் மீதா? அல்லது உலகிலேயே அதிபர் புஷ்ஷுக்கு அதிகமாக எதிரிகள் இருக்கும் அமெரிக்காவின் மீதே தாக்குதல் நடத்தி விடுவாரோ? என பட்டிமன்றங்கள் பட்டியல் கட்டி நிற்க சோமாலியாவின் மீது அமெரிக்கா தனது வான்தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறது.
அமெரிக்க ஆயுதங்கள் நவீன மானவை. அமெரிக்க போர் வியூகங்கள் நிபுணத்துவம் மிக்கவை. தொழில் நுட்பத்தில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அந்நாட்டின் தாக்குதல் திட்டங்கள் கண்டனத்திற்குரியவையாகவே இருக்கிறது. எவ்வளவுதான் அதிநவீன ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் அவை எதிர் படைகளுக்கு குறிவைப்பதற்கு பதில் மக்கள் வாழும் பகுதிகள் குறிப்பாக மருத்துவமனைகள் போன்றவற்றில் தான் ஏராளமான அப்பாவி பொது மக்கள் அமெரிக்க வன் தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள்.
கவச வாகனங்களை தாக்குவதற்கு பதில் உயிர்காக்க உதவும் ஊர்திகளை, ஆம்புலன்ஸ்களை அமெரிக்கப் படைகள் துல்லியமாக(!) தாக்கும். தவறாக நிகழ்ந்து விட்டது என ஒவ்வொரு முறையும் தவறாமல் சமாதானம் சொல்லவும் அவர்கள் தவறுவதில்லை.
இதைப் போன்ற ஒரு காட்சியை கடந்த 2006 டிசம்பரில் கிறிஸ்மஸ் தினத்தன்று சோமாலியாவில் அமெரிக்கப் படைகள் அரங்கேற்றின.
ஒரு திருமண நிகழ்ச்சியை 'சாவு நிகழ்ச்சியாக அமெரிக்கப் படைகள் மாற்றின'. மணமகன், மணமகள் உள்பட 30 பேரின் மூச்சை அமெரிக்க விமானங்களிலிருந்து புறப்பட்ட குண்டுகள் அழித்தன.
இதுவரை அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்பு போர்கள் நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காகவே என்ற நிலையில் சோமாலியாவின் மீதான அமெரிக்க தாக்குதல் எதற்காக? என்ற கேள்வி இங்கு எழலாம்?
சோமாலியா என்பது சோக பூமியல்லவா? அந்த பட்டினிப் பிரதேசத்தில் 'நடமாடும் எக்ஸ்ரே மனிதர்களைத் தவிர வேறு என்ன உண்டு. அமெரிக்காவின் அடங்காத பசிக்கு தீனி போட அங்கு எதுவும் இல்லையே?
குழப்பங்கள் குழுமி நிற்கலாம். வரலாற்றுப் பக்கங்களை அதிகமில்லை ஓர் ஆறு மாத காலம் பின்னோக்கி புரட்டினால் அமெரிக்காவின் அந்தரங்க ஆசையும் சோமாலியாவின் மீதான தாக்குதலுக்கான உண்மைக் காரணமும் தெரியவரும்.
2006 ஜுன் ஐந்தாம் தேதி இஸ்லாமிக் கோர்ட் யூனியன் என்ற போராளி இயக்கம் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி சோமாலியத் தலைநகர் 'மொகதிஸ்'ஐ கைப்பற்றியது.
இந்த முஸ்லிம் புரட்சிப் படைக்கு சோமாலிய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவு உண்டு. திறமையற்ற ஆட்சியாளர் அப்துல்லாஹ் யூசுப் மீது சோமாலியா மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த வேளை அது.
மக்களின் முழுமையான ஆதரவுடன் இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. ஜூன் 14 ஆம் தேதி ஜவாஹா என்ற நகரம் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படை வசமானது. செப்டம்பர் 24ல் ஹிஸமயோ என்ற பகுதியை யும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏறக்குறைய நாற்பது சதவீத பகுதிகள் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை சாதாரண புரட்சியாக மேற்குலகம் ஒத்துக் கொள்ள தயராக இல்லை. இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் வெற்றி பவனி தொடர்ந்தது. எத்தியோப்பிய எல்லைவரை அவர்களது ஆதிக்கத்தின் வீச்சு விரிவடையவே அதிபர் அப்துல்லாஹ் யூசுப் அலறத் தொடங்கினார். அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது. அண்டை நாடான எத்தியோபியா தனது துருப்புகளை உஷார்படுத்தியது.
ராணுவ நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் முன்னெடுத்தது.
அரை நூற்றாண்டுகாலம் அமைதியற்ற சூழலே சோமாலியாவில் நிலவுகிறது. அதிலும் கடந்த 15 ஆண்டு காலம் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையில் அந்நாடு பின்னடைவை சந்திருக்கிறது.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் ஆட்சிக்கு முன்பு நாடெங்கும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. எதிர் எதிர் பகுதிகளுக்குச் செல்பவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. இஸ்லாத்தின் பேரைச் சொல்லிக் கூட சில குழுக்கள் புறப்பட்டன.(பின்னர் அவைகளில் சில இஸ்லாமிக் கோர்ட் யூனியனுக்கு ஆதரவு தெரிவித்தன) ஆங்காங்கே ரத்தக்களறிகள் தொடர்கதையாய் இருந்தன.
லட்சக்கணக்கான சோமாலிய இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வீழ்ந்து கிடந்தனர். இலவச இணைப்பாக எய்ட்ஸ் நோயும் இளைய தலைமுறை யினரின் வாழ்வை சிதைத்தது. போதை மருந்து கடத்தல்களும் ரெக்கை கட்டிப் பறந்தன. அனைத்தையும் அடக்கி நாட்டில் அமைதி நிலவச் செய்தனர் இஸ்லாமிக் யூனியன் கோர்ட் ஆட்சியாளர்கள். இஸ்லாமிய ஷரியத் முறையிலான ஆட்சியை அங்கு அறிமுகப்படுத்தினர். கொடுந்தீமைகளை இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
தயவு தாட்சன்யமற்ற நடுநிலையான நீதி பரிபாலனத்தால் அமைதி நிலைநாட்டப் பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர். இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் சீரான ஆட்சிவர வேண்டும் என சோமாலியாவின் பிற பகுதிகளும் ஏங்கின.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் தலைவர் ஷேக் அஹ்மத் ஷரீஃபின் ஆட்சி சோமாலியாவின் பிற பகுதிகளும் பரவி விட்டால் 'தாம் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் 'உலக அமைப்பு' க்கு ஆபத்து வந்து விடுமோ என அமெரிக்கா அஞ்சியது.
இஸ்லாமிய முறையிலான ஆட்சி என்றால் வன்முறைகள் வரையறை இன்றி இருக்கும். நாட்டு மக்கள் எல்லாம் 'அநியாயமாக' மாட்டிக் கொண்டோமே' எனக் கதறி கதறி கண்ணீர் சிந்துவார்கள்' என தங்கள் ஆதரவு ஊடகங்கள் மூலமாக பரப்பிவைத்த பொய்கள் தோலுரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க கலக்கமடைந்தது. சோமாலியாவை பிளவுபடுத்தி, காயப்படுத்தி இன்பம் காணும் அண்டை நாடான எத்தியோப்பியாவும் அச்சத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்ந்தது. பக்கத்து நாடு பலமிக்கதாக மாற பகைநாடு விரும்புமா என்ன?
தக்க தருணத்தை எதிர்நோக்கி அமெரிக்காவும், எத்தியோப்பாவும் காத்திருந்தன. தனது பிடியை படிப்படியாக இழந்து வந்த சோமாலிய அதிபர் அப்துல்லாஹ் அமெரிக்காவை நோக்கி அபயக்குரல் எழுப்பினார். இவர் அபயக்குரல் எழுப்பினார் என்பதற்காக அமெரிக்கா உதவிக்கு ஓடிவரமுடியுமா? அதற்கென்று ஒரு கவுரவம் உண்டே? அமெரிக்கா சும்மா அப்துல்லாஹ் யூசுப் உதவிக்காக போனால் நன்றாகவா இருக்கும்? அமெரிக்காவுக்கு பிரத்யேக காரணம் ஒன்று உண்டே.
அமெரிக்கா என்றால் சுதந்திரதேவி சிலை, அழுது வடிவதை மறைத்துக் கொண்டு மழுப்பல் சிரிப்புடன் காமிரா முன்பு காட்சியளிக்கும் சார்ஜ் போன ஜார்ஜ் புஷ் அதைப் போன்று உடனடியாக நினைவுக்கு வருவது அல்காய்தா என்ற வார்த்தை. ஆறுமாதத்திற்கு ஒரு தடவை இந்த சொல்லைக் கூறாவிட்டால், அல்காய்தா அச்சுறுத்தல் உண்டு என உரத்து முழங்காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. அல்லது உயிரே போய்விடும். இல்லையா!
அதையே இங்கும் சொன்னார்கள் 1990களில் கென்யா, தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்திய அல்காய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சோமாலியாவில் பதுங்கியிருக் கிறார்கள் அவர்களை பிடிக்கும் வரை போராடப் போவதாக அமெரிக்கா அறிவித்து சோமாலியாக் கடலோரங்களில் போர் விமானங்கள் தாங்கிய கப்பல்களை அனுப்பி வைத்தது.
அமெரிக்க வான்படைகள், போர்க் கப்பல்கள் சோமாலியாவை முற்றுகையிட, திறமையற்ற அதிபரும் மக்கள் செல்வாக்கிழந்த வருமான அப்துல்லாஹ் யூசுப் க்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எத்தியோப்பிய துருப்புகள் சோமாலிய அரசுத் துருப்புகளுடன் இணைந்து இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளி களை கருவறுக்கும் முயற்சியை தொடங் கியது. வறுமையிலும் வெறுமையிலும் வாழ்ந்து ஆனால் கடும் போர் பயிற்சி பெற்ற முஸ்லிம் போராளிகள் தற்காலிகமாக பின்வாங்கி இருப்பதாகவும் இஸ்லாத்துக்கு விரோதமான அமெரிக்க, எத்தியோப்பிய சக்திகள் தங்கள் சதியினை வலிந்து திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது எனவும் தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார்.
அதிபர் அப்துல்லாஹ் யூசுப்பின் ஆட்சி இஸ்லாத்துக்கு முரண்பட்டது. மேற்குலக சக்திகளுக்கு பணிவதையே தனது முழு முதல் கடமையாக அது கருதுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சோமாலியாவின் முழு அதிகாரத்தையும் இஸ்லாமிய நெறியின் கீழ் கொண்டு வருவதே எமது இறுதி லட்சியம் எனவும் ஷேக் ஷெரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய துருப்புகளும், அமெரிக்கா வின் தாக்குதலும், சோமாலியாவின் மீதான தற்காலிக வெற்றியினை கடந்த வாரம் அவர்கள் பெற்றுவிட்டனர். போரின் உக்கிரத்தால் ஏதுமற்ற ஏழைமக்கள் நாட்டை விட்டே வெளியேற முயல அதற்கும் கூட ஆபத்து ஏற்பட்டது. அண்டை நாடுகளான கென்யா மற்றும் எரிட்டிரியா நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டன.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படைகளுக்கு ஆதரவாக எரிட்டிரியா தனது 2000 துருப்புகளை அனுப்பி வைத்தது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் எவ்வளவு பேர் வேட்டை யாடப் பட்டனர் என்பது போன்ற தகவல்களை தெளிவாக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு சக்திகள் தவித்தன.
சோமாலியர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்க எத்தியோப்பிய சக்திகளின் அறிவிப்புக்கு சோமாலிய மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். தனி நபர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை மீண்டும் சோமாலியாவை தொற்றிக் கொண்டது. இஸ்லாமிய பாரம்பரிய பெருமைகளை தன்னகத்தே கொண்ட நாடு சோமாலியாவாகும்.
இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் இந்நாடு ஹபஷா என அழைக்கப்பட்டது. கலீபா உஸ்மான் (ரலி) காலத்தில் இஸ்லாமிய நெறி இம்மண்ணை ஆட்கொண்டது. பல நபித் தோழர்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்த பிரதேசமே சோமாலியாவாகும். ஐஞதச ஞஎ ஆஎதஒஈஆ (ஆப்பிரிக்காவின் கொம்பு) என அழைக்கப் படும் சோமாலியா பரப்பளவில் உலகில் 42லிவது பெரிய நாடாகும். எண்ணெய் வளம், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியம் போன்றவை இங்கு இருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் 100 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட அரபு மொழி பேசும் பெருன்பான்மை மக்களைக் கொண்டது சோமாலியாவாகும்.
சோமாலியா 1960 ஆம் ஆண்டு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை அரசியல் ஸ்திரதன்மையற்ற சூழலே நிலவி வந்தது. நான்கு உள்நாட்டுப் போர்களையும் (1986, 1991, 1992, 2006) அந்த பரிதாப தேசம் சந்தித்து வறுமை, வன்முறையோடு போதைப் பொருள் உற்பத்தி நுகர்தல், இவைகளோடு எய்ட்ஸும் சேர்ந்து கொள்ள சோமாலியா துன்பத்தில் உழன்றது. 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கொடிய வறுமையில் உழல்கின்றனர். 1992லில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இதுவரை 30 லட்சம் மக்கள் மாண்டுபோயுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டுப் போர்களின் விளைவாக சோமாலியாவின் வளமிக்க வடக்குப் பிரதேசம் சோமாலிலேண்ட் எனும் பெயரில் 1991ல் தன்னாட்சி கோரி பிரிந்தது. 1998ல் வடகிழக்கு சோமாலியப் பகுதியான 'பன்லான்ட்' பிரிந்து சென்றது. இவை இன்றும் நஊகஎ உஊஈகஆதஊஉ ஒசஉஊடஊசஉஊசப தஊஏஒஞச என அழைக்கப்படுகிறது.
தாங்கொணாதுயரம், தாளாத வறுமை இவைகளுக்கு கிடையில் இஸ்லாமிய நெறி முறையிலான அரசியல் அமைப்புகள் சோமாலியாவில் தலையெடுத்தன. கோரிக்கை வெல்வதற்கு ஆயுதம் ஏந்தி னாலும் தவறில்லை என்ற மனோபாவத் திற்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
1984ல் அல் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் என்ற இயக்கம் தோன்றி சோமாலியா, எத்தியோப்பியா, திபூத்தி, எரிட்டிரியா ஆகிய நாடுகளில் பரவி இயங்கத் தொடங் கியது. தனது தாய் இயக்கமான இத்திஹாதுல் முஸ்லிமீன் இயக்கத்தின் செயல்பாடு வீரிய மற்றதாக மந்தநிலையுடன் செயல்படுவதாக கருதிய துடிப்பு மிக்க இளைஞர் கள் தங்களின் ஒஈம என்ற இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பை தனியாக இயக்கத் தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் பெரும்பான்மை சோமலிய மக்களின் இதயங்களை இஸ்லாமிக் கோர்ட் யூனியன் இயக்கத்தினர் வெற்றி கொண்டு விட்டனர்.
எந்த எதிர்மறை இமேஜையும் பெற்றுவிடாத இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் எழுச்சி அமெரிக்க ஆதரவு அதிபரான அப்துல்லாஹ்வுக்கு மட்டுமின்றி அண்டை நாடான எத்தியோப்பியாவுக்கும் கலக்கத்தைத் தரவே சோமாலிய முஸ்லிம் இயக்கம் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டது.
செப்டம்பர் 11 உலக வர்த்தக வளாக தாக்குதலுக்குப் பிறகு சூடான், சோமாலியா என்ற இருநாடுகளையும் பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.
தற்போது சூடானில் 12 ஆயிரம் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நிலையை சோமாலியாவில் தொடர ஏகாதிபத்திய சக்திகள் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
சோமாலியாவின் அண்டை நாடான எத்தியோப்பியாவை மேற்குலக சக்திகள் தங்களின் கைப்பாவையாக்கி அப்பிராந்தியத்தை அமைதிக்குலைந்த பிரதேசமாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். சோமாலியாவை துண்டாடிய மேற்கு சக்திகள் எத்தியோப்பியாவை பத்திரமாக பாதுகாத்து வருகின்றன. எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா நவீனரக ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகிறது.
இன்று அப்பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடாக எத்தியோப்பியா விளங்குகிறது. எத்தியோப்பியா வுக்கும் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் உண்டு. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் அபிசீனியா என அழகுற அழைக்கப்பட்டது. முதல் உலகப் போருக்கு முன்பு வரை அபிசீனியா என்றே அழைக்கப்பட்ட நாடு மேற்குலக ஆதிக்கத்தில் அகப்பட்ட பின்னர் அபிசீனியா வுக்கு எத்தியோப்பியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரபு மொழியில் அபிசீனியா என்று அழைக்கப்பட்ட நாட்டை கிரேக்க மொழியில் இப்போது எத்தியோப்பியா என அழைக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) அபிசீனியா என்ற எத்தியோப்பியாவை நோக்கியே இருந்தது. இஸ்லாமிய பாரம்பரியப் பெருமை கொண்ட எத்தியோப்பியாவை முஸ்லிம்களுக்கு எதிராகவே ஏகாதிபத்திய சக்திகள் கொம்புசீவி விட்டுள்ளன. இன்றும் எத்தியோப்பியாவிலுள்ள சில மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
உலகின் மிக ஏழ்மையான நாடுகள் என சோமாலியாவும், எத்தியோப்பியாவும் அழைக்கப் படுகின்றன. ஆனால் இருநாடுகளையும் மோதவிட்டு குருதிக்குடிக்க காத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள். தற்காலிகமாக எத்தியோப்பிய படைகள் சோமாலியாவை விட்டு வெளியேறியிருக்கிறது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் தோற்கடிக்கப்படவில்லை. தற்காலிகமாக பின் வாங்கியிருப் பதாக அதன் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருக்கிறார். ஆயிரக்கணக் கான இஸ்லாமியப் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்து விட்டதாக அமெரிக்க எத்தியோப்பிய சக்திகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்நிலையில் நல்லாட்சி நடத்திய, இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கீகரிக்கும் முயற்சியை ஆப்பிரிக்க யூனியனும், எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளும் எடுக்க வேண்டும். உள்நோக்கத்தோடு இஸ்லாமிக் கோர்ட் யூனியனைச் சேர்ந்தவர்களை அல்காய்தா லொள்காய்தா என்று கூறும் அமெரிக்காவின் வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தை புறம் தள்ளி சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் அதுவே அந்த வறுமை தேசங்களை வளமிக்க பிரதேசமாக மாற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment