இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, December 18, 2007

ஹஜ் பயணங்கள் 2007
அபூசாலிஹ்



ஒவ்வொரு முஸ்லிமின் ஐந்து கட்டாயக் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை வழமைப் போல் ஹாஜிகள் நிறைவேற்றி முடித்திருக்கும் உன்னதமான வேளை இது. ஹாஜிகளை வரவேற்க ஒவ்வொரு முஹல்லாவும் இன்முகத்துடன் தயாராகும் வேளை.
அதிக அளவில் பெண்கள் உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ஹஜ் எனும் புனிதக்கடமையினை இவ்வாண்டு நிறைவேற்றியுள்ளனர்.

இதில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உணர்ச்சி வெடிக்க கண்ணீர் பெருக்கெடுக்க தாய்மார்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர். 130 கோடிக்கு மேல் ஒன்றுபட்ட ஓர் உன்னத சமூகத்தினர் நாடு, மொழி, பிராந்தியம் கடந்து ஒரே உணர்வுடன் இங்கே சங்கமித்த எண்ணும் போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கை வார்த்தைகளால் வடிக்க இயலாது என நெகிழ்கிறார் அலிகாரைச் சேர்ந்த சமிரா.

எதிரிகளுக்கும் பிரார்த்தனை

இஸ்லாம் இன்று அதைப் புரியாதவர்களால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் அவ்வாறு தாக்குபவர்களுக்கும் சேர்த்து, உலக அமைதிக்காகவும் தான் பிரார்த்திப்பதாக டொராண்டோவின் ரானா அஸ்கர் ஹுஸைன் கூறுகிறார்.

தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. ஏனெனில் இஸ்லாம் ஒரு சுதந்திரமான மார்க்கமாகும். மனித நேயமே அதன் முக்கியக் குறிக்கோளாகும், நாம் இந்தப் பூமியிலிருந்து 'வெறுப்புணர்வு' என்ற வேண்டாத சொல்லை அகற்றுவோம். இஸ்லாமியக் கொள்கைகள், அதன் வழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுக்குத் தெரியும். இஸ்லாம் என்பது 'அன்பு' 'பொறுமை' போன்றவற்றின் மார்க்கமாகும் என்று நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு அதற்கு சீரிய எடுத்துக்காட்டு ஆகும். இஸ்லாத்தைப் பற்றி தவறுதலான புரிந்து கொள்ளலில் முக்கியமானது முஸ்லிம்கள் பெண்களை சமமாக நடத்தவில்லை என்பதாகும்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த உரிமைக்குறைவும் ஏற்படவில்லை. பெண்கள் இங்கே பெருமிதத்துடனே வாழ்ந்து வருகிறோம் என்றார்.

ஒற்றுமைக்கு பிராத்தனை

மேற்குலகத்தினர் உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றி, குறை கூறுகின்றனர். அதை பொதுமைப்படுத்தவும் முயல்கின்றனர். ஆனால் ஹஜ் புனிதப் பயணத்தின் பிரார்த்தனையில் ஹாஜிகள் அனைவரும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மனித குலத்துக்காகவே பிரார்த்தனை செய்து வருகின்றனர் என ஜோகன்னஸ் பர்க்கிலிருந்து வந்த ஹாஜிமா சுமையா சுலைமான் கூறுகிறார்.

முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தின் உயரிய மதிப்பீடுகளை உணர்ந்து பின்பற்றாததால் முஸ்லிம்கள் மீதான எதிர் மறையான கருத்தை பரப்ப காரணமாகி விட்டது என ஃபாத்திமா முஹம்மத் எனும் ஜோர்டானைச் சேர்ந்த ஹஜ் பயணி தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் உன்னத செய்தியை உலகம் உணரும் வகையில் செயல்பட வேண்டும் என தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் இந்தோனேஷியாவின் ஜாவாதீவுப் பகுதியைச் சேர்ந்த என்னாரு பீனா.

நாம் அனைவரும் பிற சமூகத்தினர் பின்பற்றும்படி இருக்க வேண்டும். உலகின் பார்வை அனைத்தும் நம்மீது படர்ந்திருக்கிறது என தெரிவித்த மொரிஷியஸைச் சேர்ந்த ஆசிரியை நதியா ரஹ்மான் 'நாம் நமது நேர்த்தியான வாழ்வியல் முறையின் மூலம் போல் அவர்களிடம் பதிலளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

புனித மக்கா, மினா, அரஃபா, மதினா என அனைத்துப் பகுதிகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்களால் திணறுகிறது.

அந்த ஆன்மீக வெள்ளைக்கடல் உலக சமாதானத்திற்காக பிரார்த்தனைகளை உள்ளம் உருக எல்லாம் வல்லவனிடம் வேண்டியது.

இந்தியாவிலிருந்து 1,50,000

இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்றனர். மகராஷ்ட்ராவிலிருந்து 108 வயதான மூதாட்டியும் ஜார்கண்ட் மாகாணத்தின் நான்கு வயதுச் சிறுமியும் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.

இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற் கொண்டவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார்.

அதில் 'ஹஜ் புனிதப்பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றவர் இறைவனின் அருள் பெற்றவர் ஆவார். ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் அனைத்து புனிதப் பயணிகளும் சமாதனத்துக்கும் ஒற்றுமைக்கும் நாட்டில் சமய நல்லிணக்கம் நிலவவும் பிரார்த்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இது இந்திய மக்கள் தான் அனைவரின் பிரார்தனையும் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தின் செய்தி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார். இதை கோடிட்டுக்காட்டிய மன்மோகன்சிங் 'இஸ்லாம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு கடந்த குடியரசு தினத்தன்று நாம் பெருமையுடன் வரவேற்ற மன்னர் அப்துல்லாஹ்வின் மாட்சிமைக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்' என்றும் பிரதமர் ஹஜ் பயணிகளுக்கான வாழ்த்து செய்தியாக குறிப்பிட்டார். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தலைமையில் இந்தியக் குழு சென்றது.

தவிப்பின் இடையே ஹஜ் கனவு நனவாகியது. (பாலஸ்தீனம்)

அடக்கு முறைகளால் நசுக்கப்பட்டுத் துன்பத்தில் உழலும் பாலஸ்தீன, மக்களுக்கும் ஹஜ் பயண வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பாலஸ்தீன காஸா பகுதி ஹாஜிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இனவெறி இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனம் உரிமைப் போரட்ட விவகாரத்தில் உறக்க நிலைசக்தியான ஃபதாஹ் கட்சியிடம் மாட்டித் தவித்த போது, உரிமைக்காக ஒங்கிக் குரல் கொடுத்த ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் பாலஸ்தீனம் வந்தது.

சொந்த சகோதரர்களின் தொடர் போரினால் அமைதி இழந்து தவித்தனர் பாலஸ்தீன மக்கள்.

எகிப்தின் எல்லைப் பகுதியான ரஃபாவின் அருகே காத்துக் கிடந்தனர். இஸ்ரேலின் கெடு பிடிகளையும் மீறி காத்துக் கிடந்தனர் பாலஸ்தீன மக்கள். எகிப்திய அரசு வருடத்திற்கொரு முறை காஸாப்பகுதி எல்லையை ஹாஜிகளுக்காக திறந்து விடுகிறது. இந்த ஆண்டு திறந்து விட தாமதமாகவே நவம்பர் 29 ஆம் தேதி பாலஸ்தீன மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ரஃபா எல்லை திறந்து விடப்பட்டது.
கடுமையான அழுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகும் இந்த ஆண்டு காஸா பகுதியில் 2,200 முஸ்லிம்கள் புனிதப் பயணம் சென்றனர்.

செர்பியர்களால் குதறப் பட்ட கொசோவாவில் 592 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்றனர். இதில் 130 பேர் பெண்கள். 45 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்றும் வறுமைக் கோட்டிற்கு கீழான நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பாளியின் ஹஜ்
ஹஜ் பயணங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது ஹஜ் பயணம் என்னும் இறுதி லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக செய்தது குறித்து கராச்சி அஹ்மத் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜை நிறைவேற்றியதை நான் பெறுதற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

'நான் புனித மக்கமா நகரத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த பூமியே என்னைப் பார்த்து புன்னகைப் போன்று இருந்தது எனக் கூறும் 46 வயது அஹ்மது கராச்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் மின்சார தொழில்நுட்ப உதவியாளர். இவர் தனது இறுதிக் கடமையினை நிறைவேற்றுவதற்காக ஆண்டுகணக்காக 18 மணி நேரம் உழைத்தார். அதாவது வாழ்நாளில் 8 மணி நேரம் கூடுதலாக உழைத்தார். காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டு புறப்படும் அவர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பு வீடு திரும்பியதே இல்லை. அஹ்மத் மற்றும் அவரது மனைவிக்கு ஹஜ் செல்ல மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்பதை அறிந்தார். நான்கு மாதம் வரை அவர் தான் இந்த ஆண்டு ஹஜ் செல்வோம்' என்ற நம்பிக்கையில் இருக்க வில்லையாம். நான்கு மாதத்திற்கு முன்பு அவரிடம் வெறும் இரண்டு லட்சரூபாய் தான் இருந்ததாம். இது அவரது கடந்த பத்தாண்டுகள் உழைத்த உழைப்பின் சேமிப்பாகும்.

சரியாக மூன்று மாதத்திற்கு முன்பு அவருக்கு மின்துறை தொடர்பான பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைத்தது. எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் ஒப்பந்தம் அது.

'நான் எனது ஹஜ் பயணத்திற்காகும் செலவுக்கான பணத்தை நான்கு தவணைகளாக செலுத்தினேன்' என கூறும் அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் மனைவியும் உள்ளனர். தங்களது சின்னஞ் சிறிய சேமிப்புகளைக் கூட தங்களுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் மனைவியின் சேமிப்பாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் 20 ஆண்டுகாலமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவரது பணி நேர்த்தியை பாராட்டி 20 ஆயிரம் ரூபாயை வழங்கி அவரது அலுவலகம் அவரை பாராட்டியது. இவை அனைத்தையும் ஹஜ் புனிதப் பயணத்திற்கான செலவாக எடுத்துக் கொண்ட அவரிடம் 'முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டபோது ஒருபோதும் 'தாமதப் படுத்தாதீர்கள்' ஹஜ் கடமையை நிறைவேற்ற முனைந்தால் தாமதிக்க வேண்டாம். இறைவன் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவான்'' என்றார்.
சைக்கிளில் ஹஜ்ஜுக்கு சென்ற பிரெஞ்சு மாணவர்.

முஸ்லிமின் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை சைக்கிளில் சென்று நிறைவேற்றிய இளைஞரைப் பற்றிய பிரமிப்பூட்டும் செய்தியை நாட்டிங் ஹாம் ஈவ்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

4,500 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே கடந்து சென்று ஹஜ் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரைப் போன்றே இவரும் அதீத ஆர்வத்தினால் சைக்கிள் மூலம் ஹஜ் பயணம் சென்றார்.

முதலில் இவரது சைக்கிள் ஹஜ் பயண திட்டத்தை இவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதன் பின்னர் இவரது உறுதியைப் பார்த்து பிரான்ஸின் நாட்டிங்ஹாம் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இவருக்கு ஆதரவு வழங்கின.

ஆறு மாதங்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தில் உணவு அருந்துதல் மற்றும் உறங்குது மட்டும் மிகவும் சிரமமாக இருந்தது என சலீம் குறிப்பிட்டார். ஆனால் நான் இத்தகைய கடின அனுபவங்களை எதிர்பார்த்தேன். அதனால் எனக்கு இறையருளால் அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை' என தெரிவித்தார்.

சலீமின் சைக்கிள் ஹஜ் பயணம் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நகரங்கள் வரை சென்றது. அதன் பிறகும் அவரது சைக்கிள் சென்றிருக்கும் ஆனால் நிலவழிப்பாதை மிகவும் தூரம் எனவே இத்தாலிக்குப் பிறகு அவர் கடல் மார்க்கமாக துருக்கி சென்றார். துருக்கி வந்தடைந்த பிறகு சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி சரியாக புனித மக்காவை வந்தடையும் வண்ணம் அவரது பயணம் அமைந்திருந்தது.

சலீம் வளரும் தலைமுறையினர்களுக்கான சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் இளைஞர் என நாட்டிங்ஹாமின் கரிமிய்யா கல்விக் கூடத்தின் நிறுவனர் டாக்டர் முஷாரஃப் ஹுஸைன் தெரிவிக்கிறார்.

சைக்கிளில் ஹஜ்ஜிற்கு போன முதியவர்

25 வயது பிரெஞ்சு மாணவர் சலீமின் சிலிர்க்க வைக்கும் சைக்கிள் ஹஜ்ஜைப் பற்றி பார்க்கும்போது, கடந்த ஆண்டு சைக்கிளிலேயே ஹஜ் பயணம் சென்று வந்த முதியவர் ஒருவரின் நெகிழ வைக்கும் ஹஜ் பயணம் நினைவுக்கு வருகிறது.
13 நாடுகளைக் கடந்து சென்ற அந்த ஹஜ் பயணியின் பெயர் மஹ்மூத் ஆகும். ரஷ்யர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பும் செசன்யாவைச் சேர்ந்த அவர் கொடிய தேள்கள், விஷப்பாம்புகள், வெறுப்புணர்வு கொண்ட அமெரிக்க போர் வீரர்களைத் தாண்டித்தான் அவர் தனது ஆன்மீக லட்சியத்தை அடைந்திருந்தார்.

'இவை எதுவுமே என்னை பயமுறுத்த முடியாது. ஏனெனில் நான் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுபவன்' என புன்முறுவலுடன் தெரிவித்தார்.
செசன்யா தலைநகர் க்ரோஸ்னியிலிருந்து புனித மக்கா வரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் எனினும் அவரது சொந்த ஊரிலிருந்து 1200 கிலோ மீட்டர் தூர கூடுதலாகும்.

'ஹஜ் பயணத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என மஹ்மூத் விருப்பம் தெரிவித்த போது அவரது தாயார் அதற்கான பொருளாதார பலம் இல்லை என மனம் சோர்வடைந்து விடாதே. உன்னிடம் சைக்கிள் இருக்கிறதல்லவா?' எனக் கூறியதை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் மஹ்மூத்.

சைக்கிள் செயின் 11ம்; சைக்கிள் ட்யூப்பும் அவசரத்திற்கு உதவும் என்று எடுத்துச் சென்றார்.

இவர் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் வழியாகச் சென்றபோது அமெரிக்க ராணுவத்தினர் இவரிடம் மோசமாக நடந்து கொண்டனர். ரஷ்யப் பன்றியே என அழைத்து இவரது சைக்கிளை உடைத்துப் போட்டனர். 'நான் ரஷ்யப் பன்றி அல்ல. முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை' என நிலம் அதிரக் கூறியிருக்கிறார். தன்னுடைய பாஸ்போர்ட்டையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பறித்துக் கொண்டதோடு ஈராக்கின் வழியாகச் செல்லக் கூடாது என மிரட்டி விரட்டியும் விட்டனர். அதனைத் தொடர்ந்து ஈராக்கை சுற்றிச் சென்று ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா வழியாகவும் துருக்கி மற்றும் ஜோர்டான் வழியாக மக்கா சென்றார்.

இறுதிக் கடமையினை நிறைவேற்றி இறைவனின் ஆணையையும், அன்னையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட இந்த 63 வயது பெரியவரின் சைக்கிள் ஹஜ் நெகிழ்வூட்டுகிறதல்லவா?

இயற்கை சீற்றத்திலும் இறை கட்டளை மறவாத பங்களா தேஷ் மக்கள்

ஹஜ் பயணம் செல்வதில் மூன்றாவது இடம் வகிக்கும் பங்களாதேஷில் இவ்வாண்டு 46 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்கின்றனர். கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ரஷ்யாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 26 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் மட்டும் குறைந்த பட்சம் 500 பேர் இவ்வாண்டு ஹஜ் பயணம் நிறைவேற்றினர்

Web Counter Code