இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 3, 2009

என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு




என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு
(புலிகளால் கொல்லப்பட்ட ஒரு நல்ல ஆத்மாவிட்காக எழுதப்பட்டது )
நண்பனே…
துப்பாக்கி ரவையால்
என் தலையைத் துளைத்த புலித்தோழனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது மனைவியும்
எனது செல்வங்களிரண்டும்
எனது தாயும் தகப்பனும்
எனது உறவுகளும்
உன்னைத் திட்டலாம்

எனது சமூகமும்
நான் நேசிக்கும் எனது மக்களும்
எனது சக ஊழியர்களும்
உன்னைத் தூற்றலாம்

ஆனாலும் புலி நண்பனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே மன்னித்து விடுகின்றேன்

“அப்பா கொழும்பு போயிருக்கிறார்
வரும் வரை காத்திருக்கிறேன்” என்று
வெள்ளையுடுத்த மனைவியிடம்
என் பிள்ளை சொல்கிறான்

என்னையிழந்து ஏழைகளெல்லாம்
கதறி அழுகிறார்
நான் திரும்பி வர வேண்டுமென்று
விரும்பி நிற்கிறார்

காணமல் போன
எனது விலாசத்தை விசாரித்து கொண்டிருக்கும்
இவர்களை கண்டு
நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்

ஆகவே புலி நண்பனே
என் தலையில் ரவைகளை பீச்சிய
உன் துப்பாக்கியிடம் கேட்டுச்சொல்

எனது உயிரை ஒரு கணம்
திருப்பி தரலாமா என்று

எனது மரணத்தை கண்டு
நீ புளங்கித்ததாயும்
எனது ரத்தத்தை கண்டு
நீ சப்தித்ததாயும்
இங்கே பேசிக்கொள்கிறார்கள்
ஆனாலும் புலி நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்
இறப்பு
மனிதனின் பிறப்புரிமையல்லவா
அதனால் நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

என் அன்பிற்குரிய சோதரனே
என்னை உனக்கு தெரியும்
எனது கண்ணாடியும்
எனது காற்சட்டையும்
எனது சேட்டும் செருப்பும்
எனது சிரிப்பும் விருப்பும்
எனது முகமும் முதிர்வும்
ஈரமுள்ள எனது ஹிருதயமும் கூட
உனக்கு தெரியும்

அஹிம்சையை மட்டுமே
அர்த்தமுள்ளதாக்கி கொண்ட
எனது நட்ப்பும்
எனது நடப்பும் கூட
உனக்கு நன்றாகத் தெரியும்

ஆனாலும்….
உனது ஹிம்சைக்குள்
நான் வம்சிக்கபட்ட காரணம் மட்டும்
எனக்கு தெரியாது
உண்மையாகவே எனக்கு தெரியாது

எந்த நியாயங்களுக்காய்
நீ என்னை காயப்படுத்தினாய்?
என்ன காரணங்களுக்காய்
நீ என்னை வேரறுத்தாய்

சொல்….
உன்னை
உனது தாயை
உனது தகப்பனை
உனது உடன் பிறப்புகளை உறவுகளை
நான் உளம் நோகச்செய்தேனா?

ஈழ தேசத்திற்க்கான
உனது போராட்டத்தை
நான் நாசப்படுத்தினேனா?
உனக்கு சேரவேண்டிய
ஒரு கவளம் உணவு
சில லீற்றர் தண்ணி
ஆடையணி
இவற்றிலெதையேனும்
நான் தட்டி பறித்தேனா?

இல்லை நானுன்னை
மானபங்கம் செய்தேனா?
இல்லையே….
இருந்தாலும் நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது தலைக்கு
நீ இலக்கு வைக்கும் போது
எனது ரத்தம்
இந்த மண்ணில் சிந்தியபோது
எனது உடலம்
இந்த நிலத்தில் சாய்ந்தபோது
என்னை வீழ்த்திவிட்ட
கழிப்பில் நீ குதாகலித்த போது
என்ன நினைத்தாய்?
நண்பா
நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய்?

ஒரு எதிரியை அழித்ததாய் நினைத்தாயா?
ஒரு திருடனை ஒழித்ததாய் நினைத்தாயா?
என்ன நினைத்தாய்?
எனது உயிரிலும் பெரிய புலி நண்பனே
பிரிய சகோதரனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே நான் உன்னை மன்னித்து விடுகிறேன்

நண்பனே
என் ஆத்மாவிற்க்காக
என் வேண்டுதலுக்காக
நீ என்னை தேடி வா
மௌனம் புதைத்த
என் மண்ணறைக்குள்
உன்னை மன்னித்தவனாக
நான் காத்திக்கறேன்

வா
உன்னிடமிருந்தும்
உன் தோழர்களிடமிருந்தும்
வாத்ஸல்யமான மனிதநேயத்தை
நான் எதிர்பார்க்கிறேன்
வா

இது எனது இறுதி பிரார்தனை
தயவு செய்து
என் ஜீவிதத்தை சிதைத்தது போல
என் மேலான வேண்டுதலையையும்
சிதைத்து விடாதே
வருவாய் என்று
என் ஆத்மா சொல்கிறது
நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை
பரிசுத்த நிலையில்
என் மரணத்தின் முடிவிலும்
நான் உன்னை மன்னித்து விட்டேன் வா

இன்றோ அல்லது நாளையோ
காலப்போக்கிலோ
எனது குரல்
உனது செவிப்புலனுக்கு எட்டலாம்
அப்போதவது
என் மரணத்தைப்பற்றி
உனது கையிலுள்ள துப்பாக்கி பற்றி
உன்னை சுற்றியிருப்போர் பற்றி
என்னை எதிர்பார்த்து
எனக்காக ஏங்கும்
என் குழந்தைகளைப்பற்றி
என்ன நினைப்பாய் புலித்தோழனே?

தனிமையில் இரு
நடந்ததை மீட்டிப்பார்
என் உருவத்தை
உன் மனக்கண்முன் கொண்;டு வா
உன் காதை
உன் பார்வையை
என் வீட்டுப்பக்கம் திருப்பு
என் குழந்தைகளின் அழுகை
எனது சுற்றத்தின் சோகம்
இவை உனது மனசாட்சியை தொடவில்லையா?
கண்களை ஈரமாக்கவில்லையா?
இப்போது என்ன நினைக்கிறாய்?
எனது குழந்தைகளுக்கு
என் சொந்தங்களுக்கு
என் சமூகத்திற்க்கு
நீ என்ன செய்ய நினைக்கிறாய்

நண்பனே
நான் உன்னை மன்னித்து விட்டேன்
நீ நேராக வா
எப்போதும்
என் வீட்டுக்கதவுகள் சாத்தப்பட்டிபருப்பதில்லை

அழுது கொண்டிருக்கும்
என் குழந்தைகளை பார்
தலையை தடவு
ஆறதல் கூறு
அது கூட உனக்கு சம்மதமில்லையா?
என்றாலும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன்
உண்மையாகவே மன்னித்து விடுகிறேன்

என் மண்ணறையைத் தேடி
என் குழந்தைகளைத் தேடி
என் சொந்தங்களைத் தேடி
நீ வராவிட்டாலும் நண்பனே
உனது விழித்திரைகள் மூடிக்கொள்ளும்
ஒவ்வோர் இரவின் கனவிலும்
நான் உன்னைத்தேடி வருவேன்
மனம் விட்டு பேசுவேன்
உன்னை மன்னித்ததாய் கூறுவேன்

தோழமைகளுடன்.. அ.பஞ்சலிங்கம், அரசாங்க அதிபர் -யாழ்ப்பாணம்

Web Counter Code