இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Sunday, September 2, 2007

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்

Web Counter Code