இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 10, 2007

ramadan news from abusalih in tamil

உலகமெங்கும் புனித ரமலான்
ஹபீபா பாலன்
எல்லாம் வல்ல இறைவனிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்து, பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணங்கி தனது வருமானத்தில் இல்லாதோருக்கு ஈந்து மகிழும் உயர்ந்த செயலை உலக முஸ்லிம்களின் உயர் கடமையாக்கிய உன்னத ரமலான் இதோ நம்மை விட்டு விடை பெறுகின்றது.
இப்பரந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கிலும், தென்முனையிலிருந்து வடபுலத்திலும், சமவெளிகளிலும், மலைப்பிரதேசங்களிலும், பீட பூமிகளிலும், நெய்தலிலும் பாலையிலும் புனித ரமலான் நோன்பு நெக்குருகி மெய்சிலிர்த்து நோற்கப்பட்டது.. உலகத்தில் உள்ள 140 கோடி முஸ்லிம்களும் புனித ரமலானை போற்றதற்கரிய பேறாக எண்ணி பூரித்துப் போயினர்.
ரமலான், ஈகையின் பெருமையை நமக்கு வலியுறுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்துகிறது. இறைவன் தங்களுக்கு வழங்கிய அனைத்திலும் இருந்து மனித சமூகத்திற்கு வழங்க இறைவன் கட்டளையிட்ட மாதமே ரமலான். ரமலான் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர சமுதாயத்தினருக்கும் இடையிலான உறவின் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. அதோடு சோர்வில்லாத இறைவணக்கத்தின் மூலம் படைத்தவனுக்கும் மானிடர் களுக்கும் இடையிலான உறவும் நெருக்கம் அடைகிறது.
காஷ்மீரில்...
''இந்த ஆண்டிலிருந்தாவது தங்களுக்கு அமைதிவாழ்வு வேண்டும் என காஷ்மீர் மக்கள் புனித ரமலான் மாதத்தில் உள்ளம் உருக பிரார்த்தித்தனர். இது சமாதானத்தின் மாதம் எல்லாம் வல்ல கருணையான அல்லாஹ் எங்களுக்கும் சமாதானத்தை அருளுவானாக.
ஸ்ரீநகர் பள்ளிவாசல் இமாம் அலி முஹம்மத் கூடியிருந்த மக்களிடையே உருக்கத்துடன் பிரார்த்தித்தார். அவர்களது வேதனையை அதிகப்படுத்தும் வண்ணம் ஒரு அராஜக நிகழ்வு இந்த ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது. தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் பெண்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு படையினர் மூர்க்கத்தனமாக தாக்கினர். 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற படைப்பிரிவினர் தான் இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது தாக்குதலுக் கான ஒரே ஆதாரம் இவர்கள் மீது காஷ்மீர் மாநில காவல் துறையினரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. இத்தகவலை குப்வாரா பகுதி காவல்துறை கண்காணிப் பாளர் அப்துல் கையூம் உறுதிசெய்தார். ஹாஜரா பேகம், சமீனா அக்தர் உள்பட பல பெண்களும், படுகாயம் அடைந்தவர் களாக நாசிர் அஹ்மத் பட், நாசிர்தர், முக்தர் அஹ்மத் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ருகையா பேகம் பேசும் நிலையில் இல்லை. இவருக்கு தலையில் பலமாக காயம் பட்டிருக்கிறது. எனது மகள் என்ன பாவம் செய்தாள்? ஏன் அவளை காட்டுத்தனமாக தாக்கினார்கள் என வெடிக்கிறார் அவரது தந்தை. ருகையாவின் சகோதரர் தாளாத ஆத்திரத்துடன் குமுறினார். இது இரண்டாவது தடவை, இவர்களது அக்கிரமத்துக்கு, அதிகாலை 5:30 மணிக்கு குல்போரா கிராமவாசிகள் அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக் கூட மைதானத்தில் கூடுமாறு கட்டளையிட்டுள் ளனர்.. 55வது ராஷ்ட்ரிய ரைபிள் படைப்பிரிவின் முன்னிலையில், இந்த பாதுகாப்புப் படையினரின் இன்ஃபார்மர்கள் என்று கூறப்படும் ஆள்காட்டிகள் முன்னிலையில் கிராமவாசிகள் நிறுத்தப் பட்டனர். அன்று மாலை வரை நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டனர். மறுநாள் அதிகாலை அவர்களது துன்பம் தொடர்ந்தது. பாதுகாப்புப்படையினர் முன் நிறுத்தப்பட்ட அக்தர் என்ற இளைஞரை இழுத்துச் சென்றனர். அதோடு அந்த மைதானத்தில் இருந்த காஷ்மீர் மாநில காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர். அக்தர், ருகையா உள்ளிட்ட அப்பாவிகள் இழுத்து செல்லப்பட்ட போது பெண்கள் பகுதியிலிருந்து அழுகை பீறிட்டது. ஆடவர்கள் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தனர். அக்தர் தற்போது கோமாவில், ருகையா வாய் பேச முடியாதவராகி விட்டார். பாதகம் இழைத்த பாதுகாப்பு படையினர் மீது காஷ்மீர் மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கம் போல ராணுவ உயர் அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே இதை மறுக்கத் தொடங்கியுள்ளனர். ரமலானின் முதல் நாள் நடைபெற்ற இச்சம்பவம் காஷ்மீர் முழுவதும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஸ்ரீநகரில் முக்கிய பள்ளிவாசல் இமாம் அமைதிக்காக பிரார்த்தனை செய்வதைத்தான் நம்மால் அறிய முடிகிறது. குல்ப்போரா கிராமமக்களின் கதி என்ன என்பது யாருக்குத் தெரியும்.
இந்தோனேஷியாவில்...
இந்தோனேஷியாவில் 'பெங்களு பகுதி மக்கள் இந்த ஆண்டு முதல் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டியதாயிற்று. ரமலானுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அந்தப் பிராந்தி யத்தில் நிலநடுக்கம் 8.4 என்ற அளவில் ஏற்பட்டது. 10 பேரை பலிவாங்கிய இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டடங்களை ஒருக்களித்து படுக்க வைத்தது. வியப்பூட்டும் விதமாக நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருந்த கோடா அகுனுங் பகுதியில் அதன் சிறிய சீற்றத்தைக் கூட காண முடியவில்லை. இது நிச்சயம் இறை அருள்தான் என சிலிர்க்கின்றனர். அப்பகுதி மக்கள் கடலுக்கடியில் உருவான சுனாமி நிலநடுக்கமாக மாறி ரமலானுக்கு முதல் நாள் கோடா அகுங் மக்களின் வீடுகளைப் புரட்டிப் போட்டாலும் அவர்கள் கலங்காது வெட்டவெளியில் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி முதல் நோன்பை துவக்கினர். அடுத்தடுத்த நாட்களில் மண்ணெண்ணெய், ஸ்டவ்களை ஏற்பாடு செய்து ரெடிமேட் நூடில்ஸ்களை உணவாக உட்கொண்டு நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர். இறைவனுக்கு நன்றியுடைய மக்கள் என்றால் இவர்கள் அல்லவா என சிலிர்க்கிறார். ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர்.
பெல்ஜியம், பிரான்ஸ்...
இஸ்லாமியக் கொள்கைகள் வேகமாகப் பரவிவரும் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்து ஆறு ஆண்டு ஆனதை நினைவூட்டி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் விரோத ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஏறக்குறைய செப்டம்பர் மாதம் முழுவதும் இத்தகைய வெறியூட்டும் பேரணிகள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என அவர்கள் கத்தித்தீர்த்தனர். ரமலான் மாதம் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களது வெறியுணர்வின் உச்சம் என பெல்ஜியம் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவர் உமர் ப்ராதி தெரிவித்தார். இவற்றை ரமலான் மாதத்தில் நடத்தி முஸ்லிம்களின் உணர்வை காயப்படுத்து வதே அவர்களது நோக்கம் என்றும் உமர் தெரிவித்தார். ஒரு கோடி மக்கள் வாழும் பெல்ஜியத்தில் நான்கரை லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்க சிலர் முனைந்து வருகிறார்கள். சமீபத்தில் பிரான்ஸின் பொதுத் தகவல்துறை ஒரு திடுக்கிடும் செய்தியைக் கூறியுள்ளது. பிரான்ஸில் மதரஸாக்கள் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறது.. அதாவது இன்றைய தலைமுறையினர் அரபி மொழியை விருப்பப்பாடமாக படிப்பதால் பிரான்ஸ் உளவுத் துறை எரிச்சலடைகிறதாம். இதே நேரத்தில் பள்ளிவாசல்கள் நிறைந்து நடைபாதைகளிலும் தெரு வோரங் களிலும் முஸ்லிம் இளைஞர்கள் தராவீஹ் என்ற ரமலான் தொழுகையை பேணுவதும் தொடர்கிறது.
பிரிட்டன்
பிரிட்டன் முஸ்லிம்கள் ரமலானை ஒரு சமாதான மீட்பு பிரச்சார சாதனமாக பயன்படுத்தினார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி தேசிய அளவிலான ஒரு கருத்தாய்வை முஸ்லிம்கள் ஏற்படுத்தினர். பரஸ்பர சந்தேகங்கள் களைந்து உலகிற்கு இஸ்லாம் வழங்கிய நன்கொடைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாம் குறித்தும் பிரிட்டிஷ் முஸ்லிம் கள் குறித்தும் அச்ச உண்வை களைய வேண்டும் 'இஸ்லாம்லிஇன்லிபீஸ்' ஒருங்கிணைப்பாளர் இஃப்ஹாப் ஷாஹீன் தெரிவித்தார். பாதாள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அனைத்திலும் முஸ்லிமாக இருப்பதில் பெருமையடைகிறோம் என்ற பதாகைகள் பிரிட்டன் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன. இது பிரிட்டிஷ் சமூகத்தில் மத மாச்சரியங்களை அகற்றும் என பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பி னரும் அரசுக் கொறடாவுமான சாதிக்கான் தெரிவித்தார்.
ரஷ்யாவில்
ரஷ்யாவில் ரமலானின் சிறப்பம்சமாக ஹலால் உணவகங்கள் திறக்கப்பட்டன. மாஸ்கோவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹலால் உணவகம் அமைக்கப்பட்டதாக மாஸ்கோ நகர சமய விவகாரத்துறை தலைவர் இகோர் எலிஃபிரின் கோ தெரிவித்தார். ஹலால் உணவகங்கள் பள்ளிவாசல் வளாகங் களிலே அமைக்கப்பட்டு வருகின்றன வாம். இதில் முஸ்லிம் அல்லாதவர் களையும் ஹலால் உணவின் நேர்த்தியும் சுவையும் ஈர்த்து வருகிறதாம்.
வெள்ளை மாளிகையில் இஃப்தார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் முக்கியப்பிரமுகர்களும் அமெரிக்காவின் முஸ்லிம் பிரமுகர்களும், முஸ்லிம் தூதுவர்களும் கலந்து கொண்ட ரமலான் இஃப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசினார்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தூய்மை உணர்வில் பங்கேற்கிறோம். 90 சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். இஸ்லாத்தையும் அதன் செழுமிய பண்பாட்டை யும் கொண்டாட வேண்டிய முக்கிய தருணம் இது என்றார் அமெரிக்க அதிபர் புஷ்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. நாம் தீவிரவாதத் தையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்தியே பார்க்கிறோம். முஸ்லிம்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பதில் நாம் பின் வாங்குவதில்லை. போஸ்னியாவிலும், கொசாவாவிலும் குவைத்திலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே நாம் இருந்தொம் இங்குள்ள முஸ்லிம்கள் அமெரிக்கர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ தலைமை யகமான பெண்டகனில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் நூறு பேரும் இப்ஃதார் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினருடன் முதன் முறையாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் ரமலான் தியாக உணர்வுடன் நெறியுடன் பேணப்பட்டது.
உலகின் 140 கோடி முஸ்லிம்களின் இதயங்களிலும், இமைகளிலும் நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி, எல்லாம் வல்ல இறைவனின் நற்கூலிக்காக அனைத்து இதயங்களும் காத்திருக் கின்றன.

Web Counter Code