இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

மாணவர்களுக்கு உதவிய இந்திய கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி விட்டது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஹோமங்களும், யாகங்களும் தூள் கிளப்பின. ஹோமங்களில், யாகங்களில் கிளம்பிய புகை மேற்கிந்தியத் தீவு மைதானங்களில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் கண்களில் நீர் வரும் அளவுக்கு உக்கிரமாக இருந்ததால் சிறிய பங்களா தேஷ் அணியிடம் உதை வாங்கினார்கள்.
தங்கள் அணிக்காக ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்தவர்களை உடனடியாக பார்த்தே தீர வேண்டும் என்று ஆசை வந்து தொலைத்ததோ என்னவோ இதோ இந்திய வீரர்கள் விரைவிலேயே நாடு திரும்பி விட்டனர்.
இந்திய வீரர்கள் அடித்து விளையாடுவதில்லை என்பது ஒரு பெரிய குறையா கவே சொல்லப்படுகிறது. அதிகமாக விஷமம் செய்யும் இரண்டு சிறுவர்கள் பேசிக் கொள்வதாக ஒரு ஜோக் உண்டு. அதைச் செய் இதைச் செய்யாதே என்று கூறி அப்பாவும், அம்மாவும் மாறி, மாறி அடிக்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எங்கே தான் போவேன்? என ஒரு சிறுவன் புலம்ப அவனிடம், வீட்டை விட்டு வெளியேறி இந்தியன் கிரிக்கெட் அணியினரிடம் போய் வளரு, அவங்க தான் எப்பவும் 'அடிக்கவே மாட்டாங்க என்று அந்த மற்றொரு சிறுவன் சொல்கிறானாம்.
எதிரி அணி பேட்ஸ்மேனால் பவுண்டரியை நோக்கி விரட்டப்படும் பந்தை தடுத்து நிறுத்தாமல் 'எனக்குத் தனியாக செல்ல பயமாக இருக்கிறது கொஞ்சம் துணைக்கு வர முடியுமா? என அந்த பந்து இந்திய ஃபீல்டர்களிடம் கெஞ்சிக் கேட்டதைப் போல' நம் வீரர்கள் பவுண்டரி லைன் வரை அந்த பந்துக்கு துணையாகச் சென்று பத்திரமாகக் கொண்டு விட்டு வருவார்கள். சிரமப்பட்டு பாய்ந்து விழுந்து ஃபீல்டிங் செய்வது எல்லாம் அஸருத்தீனோடு போச்சு.
இந்திய வீரர்கள் அடித்து நொறுக்குவதில்லையா? தூள் கிளப்புவதை பார்த்ததே இல்லையா? பார்த்திருக்கிறோமே! விளம்பரப் படங்களில் என்று மட்டுமே சொல்ல முடியும்.
கிரிக்கெட்டுக்கு நாம் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ? என்ற உறுத்தல் இந்த நாட்டின் சமூகவியலாளர்களுக்கு உண்டு. பிரிட்டிஷ் ஆதிக்கம் நம்மிடம் விட்டுச் சென்ற மிச்சங்களில், எச்சங்களில் கிரிக்கெட்டும் ஒன்று.
கிரிக்கெட்டின் தாயகமான பிரிட்டனில் கூட கிரிக்கெட் மீதான மவுசு குறைந்து கால்பந்துக்கு செல்வாக்கு பெருகியுள்ளது.
இந்திய மக்கள் கிரிக்கெட் மீதும், கிரிக்கெட் வீரர்கள் மீதும் காட்டும் அக்கறையை யும் நேசத்தையும் கிரிக்கெட் வீரர்களால் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை என்றே தெரிகிறது.
எது எப்படியோ போகட்டும். இனியாவது நம் வீட்டு பொடிசுகள் ஒழுங்காகப் படிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் வேளை. கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். கவனமாக மாணவர்களை படிக்க வைப்பதற்காக பாடுபட்ட இந்திய கிரிக்கெட் அணியினரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

No comments:

Web Counter Code