மதானி கைது வெளிவராத தகவல்கள்
ஹபிபா பாலன்கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர் என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி 31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.
கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும் கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து நின்றனர்.
மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந் துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.
இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத் திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.
என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து குற்றமற்றவனாக வருவேன் கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர் மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம் வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.
என்ன கொடுமை? அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.
விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக் கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத் தயாராகிறது.
மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.
எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.
மதானியின் பெயரைக் குறிப்பிடு என உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப் பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மதானி மீதான குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர் உஸ்மான் தெரிவிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப் பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத் தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற் காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.
மதானியை கைது செய்வதை தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும் முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்.
No comments:
Post a Comment