இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 19, 2007

இன்றைய முக்கிய செய்திக்ள்

தமிழக அரசு புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகங்களே நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதன்படி நெல்லையில் புதிய அண்ணாப் பல்கலைக் கழகம் துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

No comments:

Web Counter Code