போபால் விழித்துக் கொள்வோம்
மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.
ஆனால் போபால் விஷவாயு படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.
அது மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி, பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப் பங்காற்றியுள்ளார்.
போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.
தீர்ப்பு வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&முறையீடு சென்று பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.
நீதித்துறையின் முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும் பணித்திருந்தார்.
ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&க்கு உத்தரவிட்டுள்ளது. வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும் எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.
கூடன்குளம், கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை & அரசுகள் செய்யப் போகின்றன?
போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment