இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, May 19, 2007

மாயாவதியை முதல்வராக்கிய முஸ்லிம்கள்
உ.பி. தேர்தலில் பரபரப்பு திருப்பம்
விரிவான தகவல்கள்
அபூசாலிஹ்
விளிம்பு நிலை மக்களின் சமூகத்தில் பிறந்த செல்வி. மாயாவதி உ.பி.யின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுள்ளார். 1991க்கு பிறகு தனிப்பெரும் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது முக்கியத்துவத்துவம் மிகுந்ததாக கருதப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 403 சட்டமன்றத் தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் 206 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதுவரை ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள் ளது. முலாயம்சிங் யாதவ் ஆட்சியில் இருந்த பல மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 143 இடங்களைக் கைப்பற்றியிருந்த அந்தக் கட்சி தற்போது வெறும் 97 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. முஸ்லிம்களின் நேசக் கட்சியாக தங்களைத் தாங் களே வர்ணித்துக் கொண்ட இந்தக் கட்சி, முஸ்லிம் களின் முழுமையான வாக்கு களைப் பெற முடியாமல் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று. முஸ்லிம் விவகாரங்களில் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதும் தேனொழுகப் பேசி ஏமாற்றுவதும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களைப் படுகொலை செய்வதும் போன்ற செயல்களால் முஸ்லிம் சமுதாயத்தை விட்டுத் தள்ளிநிற்க வேண்டிய பரிதாப நிலை சமாஜ்வாடி கட்சிக்கு ஏற்பட்டது.
பாஜக நீங்கலாக பிரதான கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து களமிறங்கின. பிரிந்து கிடக்கும் சமூகச் சூழலில் (அரசு புள்ளி விவரப் படி) 18 சதவீதமாக செறிந்து வாழும் முஸ்லிம்களை அனைத்து கட்சிகளும் ஒரு மிரட்டும் அம்சமாகவே பார்த்து வந்தன.
முலாயமின் சமாஜ்வாடிக் கட்சி முஸ்லிம்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் வாக்குகளை அள்ளி வீசியது. காங்கிரஸின் சார்பாக வாக்குகளை அள்ளிவீச 'புதிய இளவரசர்' (ராகுல்காந்தி) களமிறக்கப்பட்டார். அவர் தனது குடும்பம் ஆட்சியில் இல்லாததால்தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற படுவிவர மான(?) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி.பி.சிங்கின் ஜனமோர்ச்சா கட்சியும் முஸ்லிம் களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு அரசியலில் இறங்கியது.
பல்வேறுபட்ட முஸ்லிம் இயக்கங் களை ஒன்றிணைத்து ம.உ.எ. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற முஸ்லிம் இயக்கமும் தேர்தலில் இறங்கியது. ஷியா மார்க்க அறிஞர் கல்பிஜவாத் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக விளங்கினார். முஸ்லிம் வாக்குகளை பிரதானப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தேர்தலில் குதிக்கும் செய்திகளை அறிந்தவுடன் பாஜக வட்டாரம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் கன்னாபின்னாவென பிரியும்; முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதால் மதச்சார்பற்ற சக்திகள் தோல்வியை சந்திக்கும்; சந்தடி சாக்கில் நாம் எளிதாகத் தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெற்று விடலாம் என உறுதியாக நம்பியது. முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக குறுந்தகடு பிரச்சார சி.டி.க்களைப் பரப்பி சமூக பதட்டத்தை ஏற்படுத்தியது பாஜக.
அதனால் தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கும் இலக்காயினர். இருப்பினும் தேர்தல் களத்தில் வெற்றி நமக்கே என உறுதியாக நம்பினர். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் இனி நேரடியாக டெல்லி செங்கோட்டை தான் என்றும் பகல் கனவு கண்டிருந்தனர்.
ஆனால், முஸ்லிம்கள் எத்தகைய மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகாமல் மதவாத சக்திகளை தோற்கடிக்கும் வலுவுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வழங்கியுள்ளனர். முஸ்லிம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவை தோற்கடிக்க உதவியது. இதன்மூலம் உத்தரப் பிரதேச அரசியல் அரங்கில் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 88 இடங்களைப் பெற்றிருந்த பாஜக, வெறும் 50 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக உறுப்பினர்கள் டெபாஸிட் இழந்தனர். ஒரு இடம் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு கிடைத்தது. பாஜகவின் மாநிலத் தலைவர் கேசவநாத் திரிபாதி போன்ற முக்கியத் தலைகள் கூட மண்ணைக் கவ்வினர்.
புதுடெல்லிக்கு அருகிலிருக்கும் நொய்டாவிலும் நேபாளத்தின் எல்லைப்புறத்தில் இருக்கும் பல்லியா தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சியின் பரவலான செல்வாக்குக்கு சான்றாக விளங்குகிறது. இந்த வெற்றியை பெரியார், அம்பேத்கார், சாகுஜி மகராஜ், ஜோதிபா பூலே மற்றும் நாராயணன் குரு போன்ற தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு அர்ப்பணிப்ப தாகக் குறிப்பிட்டார்.
இதில் உயர்ஜாதி என்று குறிப்பிடப் படும் மக்களின் வாக்குகளைக் கவர திட்டமிட்டு வியூகங்களை மாயாவதி வகுத்தார். (ஏன் அவர்கள்தான் வாக்குறுதி களை அள்ளிவீசி ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? எம் தலித் சகோதரியால் முடியாதா?) ராஜபுத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொகுதிகளை அள்ளி வழங்கினார்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 86 தொகுதிகளை மாயாவதி ஒதுக்கினார். சட்டமன்றத் தேர்தலில் வெறும் 24 பிராமண வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 61 முஸ்லிம்களை மட்டுமே மாயாவதி தனது கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தினார். இதில் 30 முஸ்லிம்கள் வெற்றி பெற்று மதவாதத்திற்கு எதிரான போரில் முன்னிலை வகித்தனர். நாங்கள் பிராமண வேட்பாளர்களை நிறுத்திய தொகுதிகளில் பிராமணர்களை விட அதிக அளவு முஸ்லிம்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன. (உதாரணம் சிபிராமு தொகுதி)
பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் பிராமணர்கள் 34 சதவீதத்தினரும், முஸ்லிம்கள் 49 சதவீத்தினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண வேட்பாளர்கள் மெஹ்ரோனி, ஹத்ராஸ், ஆக்ரா மேற்கு, திபய், பா, மதோகர், மச்சிலிஸ்கர், பர்சாத்தி, அவுரை, சவ்பேபுர், ஸைத்புர், ஜஹனாபாத், அவ்ரையா, ஹன்டியா, அத்தவ்லியா, பிங்கா, நாத்பூர், ருத்ராபூர், கர்வாரா, பிரதாப்கர், பில்கிராம், மஹோனா, கர்சனா மற்றும் சில்லுபர் போன்றவை வெற்றி பெற்ற தொகுதிகளாகும். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பிராமண வேட்பாளர்கள் வெற்றி பெற்றதில் பெரும்பாலோர் முஸ்லிம் கள் உள்ளிட்ட பிற சமூக ஓட்டுக்களை பெற்றே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வியப்பூட்டும் செய்தியுமாகும்.
சமாஜ்வாடி கட்சியை எதிர்கொள்ளும் விஷயத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் பங்கு மிகமுக்கிய இடத்தை வகித்ததாகவும், சமாஜ் வாடி கட்சிக்கு மாற்றாக முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியை தெரிவு செய்து விட்டதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆக்ரா கான்த், ஆக்ரா மேற்கு, திபய், நான்பரா, பஹோஜி, பிலாஸ்பூர், சந்த்பூர், பிஜ்னர், அப்ஸல்கர், மற்றும் போஜ்புரா வெற்றியின் முகட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது.
முஸ்லிம்களுக்கு கெடுதலை மட்டுமே புரிந்துவரும் பாஜக தோற்றுவிட்டது தேசிய அரசியலின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் 50 மட்டுமே.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி யும் போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009ன் முக்கிய பிரதமர் வேட்பாளர் மாயாவதி என இப் போது ஊடகங்களில் சில அந்த இரும்புப் பெண்மணியை இப்போது உசுப்பிவிட துவங்கியுள்ளன.
பிராமணர்களில் ஏழு பேருக்கு அமைச்சர் பதவியும், முஸ்லிம்களில் ஐந்து பேருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார் மாயாவதி.
உத்தரப்பிரதேச முஸ்லிம் அறிவுஜீவிகளின் மனங்களில் பெரும் சிந்தனை யோட்டம் அலையடிக்கத் தொடங்கி விட்டது.
பல்வேறு பிரிவாக முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடும் என்று நினைத்தவர்களின் எண்ணங்களை முஸ்லிம்களின் பெரும்பிரிவு வாக்குகள் பகுஜன் சமாஜுக்கும் அடுத்து சமாஜ்வாடிக்கும் காங்கிரசுக்கும் சென்றன. இதன்மூலம் உ.பி. முஸ்லிம்கள் அழுத்த மான செய்தியை வழங்கியுள்ளார்கள்.
படுதோல்வியை சந்தித்த பாஜக முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்தி, அவர்களைக் கொச்சைப்படுத்திய அவதூறு குறுந்தகட்டை மாநில பாஜக வெளியிட்டதுதான் தங்கள் அணியின் படுதோல்விக்குக் காரணம் என பாஜகவின் தேசியத் தலைமை இப்போது ஒப்பாரி வைக்கிறது.
மாயாவதி தவறே செய்யாதவர் அல்ல. அவ்வாறே முலாயம் தவறுகள் மட்டுமே செய்தவரும் அல்ல. அதிக சதவீதம் உள்ள முஸ்லிம்கள் எப்போதும் தங்களுக்கு இழைக்கப்படும் தவறுகளை சகித்துக் கொண்டு ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல.
தலித் சகோதரி மாயாவதியின் வெற்றிக்காக அவரை வரவேற்கிறோம். அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம். இதில் முஸ்லிம் அரசியல் சிந்தனையாளர் களுக்கு கற்றுக் கொள்ள பாடங்கள் ஏராளம் உண்டு.
மாயா ஜாலம்!
முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதிகளில் பரவலாக வாக்குகள் பதிவாயின. இதில் 60 சதவீத வாக்குகள் மாயாவதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் வாக்கு வங்கிகளாக இருந்த முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு முலாயமின் பக்கம் சாய்ந்தனர். இப்போது அவர்கள் மாயாவதியை ஆதரித்தது ஆச்சரியமாக இருக்கிறது.
முலாயம்சிங் கடந்த ஆட்சியில் செய்த தவறுகள் முஸ்லிம்களை கோபம் கொள்ள வைத்தது. பாஜகவுடன் முலாயம்சிங் யாதவ் 'ரகசிய உறவு' வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முலாயம் பதிலளிக்கவில்லை. அவரது ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த கேசரிநாத் திரிபாதி சபாநாயகராக பணியாற்றியது இந்த ரகசிய உறவு அம்பலப்படுத்தியது. வேலையற்ற இளைஞர்களும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டபோது அதிகமான வேலையற்ற சமூகமாக கருதப்படும் முஸ்லிம் களுக்கு அவர் முன்னுரிமை அளிக்கத் தவறினார். உருது பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவித்திருந்த முலாயம், அதை கடைசி வரை நிறைவேற்றவில்லை.
இதுபோன்ற ஏராளமான காரணங்களால் வெறுத்துப் போன முஸ்லிம்கள், மாயாவதியின் பக்கம் சாய்ந்தனர். வேறு எந்தக் கட்சியும் கொடுக்காத அளவுக்கு முஸ்லிம்களுக்கு அவர் தொகுதிகளை வாரி வழங்கியதும் முஸ்லிம்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டியது.
ராகுல் அலை? காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட ராகுல் காந்தி உ.பி. தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்தார். 106 இடங்களில் சாலையோர ஊர்வலங்களை நடத்தினார். முலாயமை கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் இதை ரசித்தாலும் வாக்குகளை அளிக்கவில்லை. ஏற்கனவே இருந்த 26 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் மூன்று இடங்களை இழந்து 22 இடங்களைப் பெற்றிருக்கிறது. வாக்கு வங்கியும் உயரவில்லை. மொத்தத்தில் ராகுலின் அரசியல் வாழ்க்கையில் ஒரு படிப்பினை என்றால் மிகையல்ல

No comments:

Web Counter Code